Sunday, July 24, 2022

தமிழ் கல்வெட்டுகளில் செந்தமிழ் ஏன் இல்லை

 கல்வெட்டுகளில் பயின்று வரும் மொழி, இலக்கிய மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதன் காரணம் என்ன?(சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் )



பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்: சங்கக் கவிதைகளின் மொழியும் சமகால பிராமிக் கல்வெட்டுகளின் மொழியும் தனித்து நிற்கின்றன. கம்பராமாயணத்தின் மொழியும் சோழர் காலக் கல்வெட்டுகளின் மொழியும் வேறானவை. 

இதற்குக் காரணங்கள் பல. சில காரணங்கள் ஊகங்களே. ஒரு காரணம், எழுதப்பட்ட பொருள். கவிதையின் பொருள் கற்பனை கலந்தது. இந்தக் கற்பனைக்கு ஒரு மொழி சார்ந்த ஒரு மரபு இருந்தது. கல்வெட்டுகளின் பொருள், கொடை, போர் வெற்றி, கோயில் பராமரிப்பு முதலிய உலகியல் சார்ந்தது. இன்றும் அரசு ஆவணங்களின் மொழிக்கும் நவீன இலக்கிய மொழிக்கும் வேறுபாடு உண்டு.

இரண்டாவது காரணம், எழுத்தின் நோக்கம். இலக்கியம், மொழித் திறம் படைத்தவர்கள் படித்து இன்புற எழுதுவது. கல்வெட்டு, குறைந்த படிப்பறிவு உள்ளவர்களும் படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டது. இதனால் கல்வெட்டுத் தமிழில் பேச்சுத் தமிழின் கலப்பைப் பார்க்கலாம்.

மூன்றாவது காரணம் புரவலர்களின் மொழிக் கொள்கையும் நாட்டின் மொழி நிலையும். பிராமிக் கல்வெட்டுகளில் சுட்டப்படும் உறவிடங்களைத் தானமாகப் பெற்றவர்கள் பிராகிருதம் பேசிய சமணத் துறவிகள். இந்தக் கல்வெட்டுகள் தமிழும் பிரகிருதமும் கலந்து எழுதப்பட்டிருக்கின்றன. இதே சமணர்கள் தாங்கள் தமிழில் கவிதை எழுதும்போது தமிழ்க் கவிதை சார்ந்த மொழி மரபை – பிற மொழி கலக்காத, கலந்தாலும் தமிழாக்கப்பட்ட மொழியை – பின்பற்றுகிறார்கள். சோழ அரசர்கள் தங்கள் பேரரசுத் தகுதியை நிலைநாட்ட இந்தியாவிற்கு வெளியேயும் அரசவைகளில் கோலோச்சிய சமஸ்கிருதத்தைத் தழுவி அதைக் கல்வெட்டுகளில் தங்கள் பெருமையைப் பறைசாற்றப் பயன்படுத்தினார்கள். இதனால் கல்வெட்டுகளில் அரசனின் வம்சப் பெருமையையும் போர் வெற்றிகளையும் புகழும் மெய்க்கீர்த்தி சமஸ்கிருதத்தில் அல்லது சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருக்கும். ஆனால் இது போன்ற புகழ்ச்சியுரை இலக்கியத்தில் பாடாண்திணையாக வரும்போது நல்ல தமிழில் இருக்கும். மேலே சொன்ன காரணத்தால் கல்வெட்டுகளில் பிறமொழிச் சொற்கள் அதிகமாக இருக்கும். அரசு நிர்வாகத்தைச் சேர்ந்த பல கலைச் சொற்களும் பிராகிருதத்தில் இருக்கும்.

நான்காவது காரணம், மொழி வெளிப்பாட்டு வடிவம். இலக்கியம், கவிதை வடிவம் கொண்டது. கல்வெட்டு, உரைநடை வடிவம் கொண்டது. உரைநடையில் மொழியைப் பொறுத்தவரை அதிகச் சுதந்திரம் உண்டு. இறையனார் அகப்பொருள் உரை போன்ற இலக்கியம் தொடர்பான உரைநடை இலக்கிய மொழியின் தன்மைகளைக் கொண்டது. உலகியல் தொடர்பான உரைநடை, நாட்டு மொழிப் பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

http://www.vallamai.com/?p=625

இ.அண்ணாமலை- பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.

இ.அண்ணாமலை (பி. 1938) இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIIL) இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் மொழி, மொழியியல், கல்வித் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு போன்ற துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிதற்கால மரபுத்தொடர் அகராதி போன்ற நூல்களின் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான இவர் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, யப்பான், நெதர்லாந்து போன்ற நாடுகளில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment

தொன்மையான நடராஜர்

  தொன்மையான நடராஜர்  இராஷ்டிரகூடரின்   காலத்தைச்   சார்ந்த   மும்பையின்   புறநகர்ப்பகுதியான   கரபுரி   என்னும்   எலிபெண்டா   தீவுகளின்   மகோ...